தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பி செல்ல விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பல்வேறு பணிகளுக்காக அங்கு செல்ல வேண்டியவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டு குறித்து செய்தி நிறுவனங்கள் மேற்கொண்ட விசாரணையில் பலர் ஆறு வாரங்களுக்கும் மேலாக விசா கிடைக்காமல் தவித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதனால், தங்கள் விமான டிக்கெட்டுகளின் பயண தேதியை பலமுறை மாற்ற வேண்டியுள்ளதாகவும் அதனால் ஆயிரக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மற்றொரு புறம் பணிக்கு திரும்புவது எப்போது என்று நிறுவனங்கள் நெருக்கடி கொடுப்பதால் மன உளைச்சல் ஏற்படுவதோடு தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.

தவிர, தங்கள் குழந்தைகளின் பள்ளி படிப்பை தொடரமுடியாமல் உள்ளதால் விசா நேர்காணலுக்கான விலக்கு அளிக்கும் ட்ராப் பாக்ஸ் வசதியை அதிகரிக்க கோரி அமெரிக்க தூதரகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தூதரக செய்தி தொடர்பாளரிடம் கேள்வி எழுப்பியபோது, அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசுவது குறித்து நாங்கள் விளக்கம் அளிக்க முடியாது. விசா அதிகாரிகள் ஓய்வின்றி வேலை செய்து கொண்டிருப்பதாகவும் இந்தியா முழுவதும் இந்த ஆண்டு 3 லட்சம் பேருக்கு விசா வழங்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தாமதமான விசா கோரிக்கைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு தொழில் மற்றும் சுற்றுலா B1/B2 செல்ல முதல் முறையாக விண்ணப்பித்தவர்களை விரைவில் நேர்காணல் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தவிர, தற்காலிகத் தொழிலாளர்கள் (H/L), குழு உறுப்பினர்கள் (C1/D), மற்றும் மாணவர்கள் (F/M/J) ஆகியோருக்கான விசாக்களுக்கு நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறோம் என்று அமெரிக்க தூதரக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.