பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில்  அக்டோபர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று மாநில துணைமுதல்வர் அஸ்வத் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ள நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கர்நாடக மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வந்தால், இ-பாஸ் உள்பட பார்கள் கேளிக்கை விடுதிகள் திறக்கவும்,  பல்வேறு தளர்வுகளையும் மாநில அரசு அறிவித்து வருகிறது.  தற்போது வாகன ஓட்டிகளுக்கு முக்கவசம் தேவையில்லை என்றும், மக்கள் கொரோனாவுடன் வாழப் பழக வேண்டும் என்பதில் கர்நாடக அரசு கூறி வருகிறது.

இதைத் தொடர்ந்து கல்லூரிகள் அக்டோபர் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, கர்நாடக துணை முதல்வரும் உயர் கல்வித்துறை அமைச்சருமான அஸ்வத் நாராயணன் வெளியிட்டுள்ள டிவீட் பதிவில், “செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். அக்டோபர் 1ம் தேதி முதல் கல்லூரிகளைத் திறக்க அரசு தயாராகி வருகிறது.

கல்வியாண்டு தொடங்கியதும் இளங்கலை, பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நடத்தப்படும். கல்லூரிகளைத் திறப்பது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு காத்திருக்கிறோம். அது கிடைத்ததும் மாநில அரசு உத்தரவைப் பிறப்பிக்கும்”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.