டெல்லி: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் இறுதியாண்டு தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்; கொரேனா தொற்று காரணமாக, மாநிலங்கள் தேர்வுகளை ஒத்திவைக்க விரும்பினால் யுஜிசிஐ அணுகி தீர்வு காணுங்கள் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கொரோனாவால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும்  ரத்து செய்யப்பட்டன.   மேலும், இறுதித்தேர்வு,  செப்டம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டது.

இதை   எதிர்த்து,  உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்கில்பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வந்தது. கடந்த விசாரணைகளின்போது, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது,  தேர்வுகளை ரத்து செய்ய மாநில அரசுக்கு உரிமையில்லை என்று தெரிவித்த யுஜிசி, இறுதியாண்டு தேர்வை  செய்தால் மாணவர்களின் எதிர்காலத்தில்  பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று கூறியது.

ஆனால், யுஜிசியில் வாதத்துக்கு சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தீர்ப்பில், பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழக மானிய ஆணையம் வெளியிட்ட  ஜூலை 6 சுற்றறிக்கையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்வதாக அறிவித்து உள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என்றும்,  இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக்கூடாது  என்றும்,  மாணவர் களை ஊக்குவிக்க மாநிலங்கள் பரீட்சைகளை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறது.

தேர்வு நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கக் கூடாது.  பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் உள்ள மாநிலங்கள் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தேர்வு களை ஒத்திவைக்க முடியும் என்று கூறிய நீதிபதிகள், அவர்களுக்கான தேர்வு தேதிகளை சரிசெய்ய யுஜிசியை அணுகி தேர்வு நடத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மாநில அரசுகள் கோரலாம் என்று உத்தரவிட்டது.

மேலும், மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.