சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு 9.30 மணிக்கு வந்தார். அங்கு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அங்கு வந்தார். அங்கு பன்னீர்செல்வத்தை சந்தித்து அவருக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

இருவரும் இணைந்து செயல்படுவதாக அறிவித்தனர். தீபா நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ இருவரது நோக்கமும் ஒன்றாக இருக்கிறது. அதனால் ஆதரவு தெரிவித்துள்ளேன். அதிமுக எம்எல்ஏ.க்கள் தற்போதுள்ள நிலைப்பாடு நிலையானதல்ல’’ என்று தெரிவித்தார்.

முன்னதாக சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கிய தினத்தன்று தீபாவுடன் இணைந்து போராடுவேன் என்று ஓபிஎஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் அடைந்த தினம் முதல் சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்த வந்த தீபா தற்போது ஓபிஎஸ்.க்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்ட தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர்களும் பன்னீர்செல்வத்துடன் இணைந்து போராடுமாறு தீபாவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். இதன் அடிப்படையில் தற்போது பன்னீர்செல்வத்துடன் தீபா இணைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், கூவத்தூரில் நேற்று தங்கியிருந்த சசிகலாவை தீபாவின் அண்ணனும், ஜெயலலிதா அண்ணன் மகனுமான தீபக் சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று தீபாவும், பன்னீரும் இணைந்திருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னர் தீபா கீரின்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு வந்தார். அங்கு தீபாவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.