டெல்லி: பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31ந்தேதி வரைதான் அவகாசம். அதற்கு மேல் நீட்டிக்கப்படாது என்று மத்தியஅரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய நேரடி வரிகள் வாரியம்  பலமுறை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இறுதியாக  பான்-ஆதார் கார்டு இணைப்புக் கான காலக்கெடுவை  2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், பான் மற்றும் ஆதார் எண்ணை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் -இல்லையென்றால் பான் எண் செயலிழந்துவிடும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, வரும் மார்ச் 31-ம் தேதிக்குள், பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்குமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை செய்யாவிட்டால் அவர்களின் வங்கிச் சேவை பாதிக்கப்படும் என்றும், பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என்றும், இணைக்காவிட்டால், பான் எண் செயலிழந்துவிடும் என்றும், குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் எண்ணை பயன்படுத்த முடியாது என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

ஆதார் மற்றும் பான் எண்ணினை இணைக்க http://incometaxindiafiling.gov.in./ என்ற இணைய பக்கத்தில் சென்று இணைக்கலாம். இந்த இணைய பக்கத்திற்கு சென்று, வலைதளத்தின் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அதில் உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும். இதனையடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும் அதனை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அங்குள்ள captcha எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிக்கு ஒரு ஓடிபி வரும். இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

இதை செய்ய முடியாதவர்கள் எஸ்எம்எஸ் கொடுத்தும்  இணைக்கலாம். அதன்படி,  பான் எண்னை ஆதார் எண்ணுடன் மொபைல் எஸ்எம்எஸ் மூலமும் இணைக்கலாம். இதற்காக நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். சரி இதை எப்படி செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

இதுமட்டுமின்றி, ஆங்காங்கே செயல்பட்டு வரும் ஆதார் மையத்திற்கு சென்றும்  இணைக்கலாம். இதற்காக Annexure-I என்ற பார்மில் தேவையான விவரங்களை பதிவு செய்து, தேவையான ஆவணங்களையும் உடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். இதற்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். இதே ஆன்லைனில் இலவசமாக இணைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்து உள்ளது.