சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி,. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தென்னிந்திய திருச்சபைகளைச் சேர்ந்த பேராயர்கள் (பிஷப்) ஆதரவு தெரிவித்தனர். இந்த சந்திப்பு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில்,  தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) பேராயர்கள் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதையடுத்து அறிவாலயம் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த,  தென்னிந்திய திருச்சபை செயலாளர் சி. பெர்னான்டஸ் ரெத்தினராஜா, மதுரை பேராயர் ஜோசப், கோயம்புத்தூர் பேராயர் தீமோத்தேயு ஆகியோர் கூறியதாவது,

“தென்னிந்திய திருச்சபை சார்பில் இன்று ஸ்டாலினை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பேராயர்கள் சார்பாக நாங்கள் சந்தித்தோம். பெரும்பான்மை மக்களும், சிறுபான்மை மக்களும், இன்றைக்குச் சுபிட்சமாக, மகிழ்வோடு தமிழ்நாட்டில் வாழ்ந்துவருகிறார்கள் என்பதை இந்த நாடே அறியும். அந்த வகையிலே கிறிஸ்துவ மக்களுக்கு என்றைக்கும் அரணாக இருக்கின்ற அமைப்பு திராவிட முன்னேற்றக் கழகம். எனவே, எங்களுடைய ஒட்டுமொத்த ஆதரவையும், எதிர்வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழகம், அதனுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு எங்களுடைய ஆதரவினைத் தெரிவித்தோம்  திமுக தலைமையிலே போட்டியிடக் கூடிய அனைத்து வேட்பாளர்களும் நிறைவான வெற்றியைப் பெறுவார்கள் என்று கூறியதுடன், ஸ்டாலினுடைய  வெற்றிக்காக உழைப்போம், உழைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை நாங்கள் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறோம்.

100 ஆண்டுகளுக்கும் மேலாகவே சமூக நீதியைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிற ஒரு மாநிலம்தான் தமிழ்நாடு. சமூக நீதியை நடைமுறைப்படுத்துகின்ற மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், சில மாதங்களாகவே, தமிழ்நாட்டில் ஒருசில நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டை மதக்கலவர பூமியாக மாற்ற நினைப்பவர்களின் சிந்தனை தமிழ்நாட்டிலே ஒருபோதும்எடுபடாது, யாரும் தமிழ்நாட்டை மத ரீதியாகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அது தமிழ்நாட்டிலே நடைபெறாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நெல்லையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கேரளா கத்தோலிக்க பிஷப் மற்றும் 5 பாதிரியார்கள் கைது…