விசாரணை ஆணைய செலவுகளால் கோடிக்கணக்கில் வீணாகும்  தமிழக மக்கள் பணம்

Must read

சென்னை

முந்தைய அதிமுக அரசு அமைத்துள்ள பல விசாரணை ஆணையங்களால் பல கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியின் போது பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.   இவை குறித்த உண்மை அறிய அரசு பல விசாரணை ஆணையங்களை அமைத்தது.  இந்த ஆணையங்களின் நிர்வாக செலவுக்காகப் பல கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது.   இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பபட்டு அதற்கு தற்போது பதில் வந்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் மொத்தம் சுமார் 24 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   ஏற்கனவே காவல்துறையால் விசாரணை நடத்தப்பட்டும் முடிவு எட்டாததால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.   இவற்றில் குறிப்பிடத்தகக்வை இரண்டு ஆகும். 

அவை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் மற்றும்  தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து அமைக்கப்பட்ட அருணா ஜகதீசன் ஆணையம் ஆகியவை ஆகும்.  இந்த ஆணையங்கள் விசாரணைக் காலம் முடிந்தும் மேலும் அவகாசம் அளிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையங்களில் நீதிபதி அருணா ஜகதீசன் ஆணையத்துக்கு ஊதியம், நிர்வாக செலவுகள் ஆகியவற்றுக்கு ரூ.4.23 கோடியைத் தமிழக அரசு வழங்கி உள்ளது.  மற்றொரு ஆணையமான ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ரூ. 3.52 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.  இந்த ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டும் இந்த செலவு செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தால் அந்த ஆணையத்தில் எவ்வித பணியும் நடக்க வாய்ப்பில்லை.  ஆனால் பணியே நடக்காத அந்த ஆணையத்துக்கு அதிமுக அரசால் ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகளுக்காக ரூ.3.22 கோடி மக்களின் வரிப்பணத்தில் செலவு செய்யப்பட்டுள்ளது.   இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

More articles

Latest article