டெல்லி: 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களின் பயிர்க்கடன்களையும்  தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை – உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை எதிர்த்துமேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை  உச்சநீதி மன்றம்  ரத்து செய்துளளது.

கடந்த 2016ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைல், “5 ஏக்கருக்குள்ளாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன் மற்றும் நகை கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், “விவசாயிகளை சிறு,குறு என பிரித்து பார்க்கக்கூடாது. பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் விதமாக ஒட்டுமொத்தமாக கடன்களை ரத்து செய்ய வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

விசாரித்த உயர் நீதிமன்றம், “தமிழக அரசு விவசாயிகளை சிறு குறு என்று பாகுபடுத்தாமல் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை விரிவுபடுத்தி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி மற்றும் போபண்ணா ஆகியோர் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த விசாரணையின்போது. தமிழக அரசு தரப்பு வாதத்தில், “மாநிலத்தில் ஏற்கனவே 2.5 முதல் 5 ஏக்கர் வரை மட்டும் நிலம் வைத்துள்ள அதாவது சிறு குறு விவசாயிகளின் கடனான ரூ.5 ஆயிரத்து 780 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக 1,980 கோடியை மேலும் தள்ளுபடி செய்வது என்பது அரசுக்கு கூடுதல் சுமையாகும். அதனால் ஒட்டுமொத்த விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது என்பது முடியாது. மேலும், அரசின் கொள்கை சார்ந்த முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட அதிகாரம் கிடையாது’’ என வாதிடப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு  வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம்,  5 ஏக்கருக்கு மேல் விவசாயநிலம் வைத்திருப்போரும் பெற்ற கடனை தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்தது. இதுதொடர்பாக தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.