சென்னை: காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியால் கல்லறைத் தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் பெய்தகன மழையின்போது,  கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில், இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இவர் மதுமயக்கத்தில் இருந்ததாக சிலரும், சிலர்  மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்றும் கூறி வந்தனர். பொதுவாக அந்த கல்லறை தோட்டத்தில் பல குற்றவாளிகள் மறைந்து வசிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் மரம் உடைந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என அவருடன் இருந்த சக நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர். அதையடுத்து,  அங்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, அந்த இளைஞன் உதயா உயிருடன் இருப்பதை அறிந்து, அவரை மீட்டு தோளில் சுமந்து கல்லறை தோட்டத்திற்கு வெளியே  சென்று ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதுதொடர்பான புகைப்படம், வீடியோ வைரலான நிலையில், தக்க நேரத்தில் இளைஞரை காப்பாற்ற முதுகில் சுமந்து சென்று மருத்துவ மனையில் அனுமதிக்க உதவிய பல தரப்பினரும் வாழ்த்திய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில்,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  இளைஞர்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.