டில்லி:

டில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் கன்னையாகுமார் மீதான தேசதுரோக வழக்கில்  டில்லி காவல்துறைக்கு மெட்ரோபாலிட்டன் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.

முன்னாள் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள்  மாணவர் தலைவர் கன்னையா குமார் மற்றும் சில மாணவர்கள்  மீது காவல்துறை தேச துரோக வழக்கு பதிவு செய்து குற்றச்சாட்டுக் களை பதிவு செய்ய காவல்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த   டில்லி காவல்துறைக்கு நீதிபதி  பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் கடந்த 2016ம்  ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அஃப்சல் குருவை தூக்கில் போட்டதை கண்டித்து, கண்டனக் கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர். அப்போது மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் இந்திய அரசு குறித்து விமர்சித்ததாக கூறப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து,  மாணவர் சங்கத்தலைவர் கன்னையா குமார் உட்பட 15 பேர் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாக  டில்லி காவல்துறை அவர்கள்மீது வழக்கு பதிவு செய்தது. பல்கலைக்கழகமும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கைகளை எடுத்தது.

இது தொடர்பாக  தேச துரோக வழக்கு பதிவு செய்த டில்லி காவல்துறை, கன்னையாகுமார் உள்பட 15 பேர் மீது  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முன்வந்தது.

அப்போது காவல்துறையிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி, இதற்கான ஒப்புதல் குறித்த ஆவனங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், சட்டத்துறை ஒப்புதல் இல்லாமல் காவல்துறை தாக்கல் செய்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி  தீபக் ஷெராவத், 10 நாட்களுக்குள் அதற்கான ஒப்புதல் பெற்று தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.