சென்னை: சென்னையின் முக்கிய பகுதியான கடற்கரை சாலையில் நடைபெறுவதாக இருந்த தனியார் நிறுவனத்தின் Formula 4 Racing சென்னை கார் பந்தயத்தை காலவரையின்றி ஒத்திவைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

இந்த கார் பந்தயத்துக்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மட்டுமின்றி நீதிமன்றமும் கடுமையாக விமர்சித்த நிலையில், மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட பேரிழப்பதால்,  சென்னை தீவுத்திடலில் நடைபெற இருந்த கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை தீவுத்திடல் பகுதியில், வருகிற 9 மற்றும் 10-ஆம் தேதிகளில், பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.  இதற்காக தமிழக அரசு சார்பில் ரூபாய் 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  சென்னை தீவுத்திடல் பகுதியில், தனியார் நடத்தும் பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்று  கேள்வி எழுப்பியது. மேலும் இந்த கார் பந்தயம் காரணமாக சென்னை கடற்கரை காமராஜர் சாலை, அண்ணா சாலையின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிகளால் பல பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்காக போக்குவரத்து மாற்றம் செய்தது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதற்கிடையில்,  சென்னை கார் பந்தயம்,  புயல் காரணமாக டிசம்பர் 16,17 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் டிசம்பர் 4ந்தேதி ஆந்திராவில் கரையை கடந்த மிச்சாங் புயல் காரணமாக சென்னை பெருவெள்ளத்தில் மிதந்தது.  சென்னை வெள்ளம் மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,  மிக்ஜாம் புயல் காரணமாக  சென்னை தீவுத்திடலில் நடைபெற இருந்த கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தனியார் நடத்தும்  கார் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!