திருச்சி: மழை வெள்ளம்  மற்றும் நிர்வாக காரணமாக  திருச்சி  பாரதிதாசன் பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழகத்தின் மத்திய பகுதியில் இருக்கக்கூடிய திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது . இப்பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள 9 மாவட்டங்களில் 130-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல மாணவர்களுக்கு இப்பல்கலைக்கழகம் பேருதவியாக இருக்கிறது. அப்பகுதியிலுள்ள கடைகோடி கிராமத்தைச் சேர்ந்த பலரும், தங்கள் குடும்பத்திலேயே முதல் பட்டதாரியாக வருவதற்கு இப்பல்கலைக்கழகம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்த பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுக்கான தேதிகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம், அதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போது நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி பாரதி தாசன்  பல்கலை மற்றும் அதன் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.