சென்னை: மிச்சாங் புயல் காரணமாக, வெள்ளத்தில் மிதந்த சென்னை மக்கள் குடிக்க நீர் கூட கிடைக்காமல் அவதிப்பட்ட நிலையில், சென்னை  மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் 444 லாரிகள் மூலம் 4227 நடைகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.

பல பகுதிகளில் குடிதண்ணீர் கிடைக்காமலும், குடிநீர் வாரியம் உள்பட எந்தவொரு ஹெல்ப்லைனையும் மக்கள் தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு மின்சாரம், தொலைத்தொடர்பு என அடிப்படை தேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்ட நிலையில், குடிநீர் வாரியம், 444 லாரிகள் மூலம் 4227 நடைகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளது.

 

கடந்த 4ந்தேதி (டிசம்பர் 4)  சென்னை வழியாக ஆந்திரா சென்று கரையை கடந்த  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில்  கனமழை பெய்தது.   வரலாறு காணாத மழையால், சென்னை வெள்ளத்தில் மிதத்தது. மேலும் அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்ததால், சென்னை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. நீர் நிரம்பியதால், முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், சில இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.  இருந்தாலும் இன்னும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை நின்ற பிறகும், வெள்ளம் பாதித்த பல இடங்களில் தண்ணீா் வடியவில்லை, மின்சாரம், தண்ணீா் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வெள்ளத்தில் தத்தளித்த மக்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்றும், பால் மற்றும் குடிக்க நீர் கூட கிடைக்கவில்லை என்று கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை  மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் 444 லாரிகள் மூலம் 4227 நடைகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 07.12.2023 அன்று பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 42 நீர் நிரப்பும் நிலையங்களிலிருந்து 444 லாரிகள் மூலம் 4227 நடைகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது. மேலும், குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் அனைத்து பகுதிகளிலும் சீராக வழங்கப்பட்டது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு லாரிகள் மூலம் நேரடியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படக்கூடிய 74 நிவாரண முகாம்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு தயாரிக்கும் கூடங்களுக்குத் தேவையான குடிநீர் சென்னை குடிநீர் வாரியத்தால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் 116 அதிவேக நீர் உறிஞ்சும் இயந்திரங்களைக் கொண்டு கழிவுநீரை வெளியேற்றுவதோடு, பிரதான கழிவுநீர் குழாய்களில் உள்ள அடைப்புகளை 476 தூர்வாரும் இயந்திரங்கள் மற்றும் ஜெட்ராடிங் இயந்திரங்களைக் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்கிய 263 இடங்களில் மோட்டார்களைக் கொண்டு மழைநீர் அகற்றப்பட்டது. மேலும், 325 கழிவுநீர் உந்து நிலையங்களில் 179 ஜெனரேட்டர்களைக் கொண்டு தொய்வில்லாமல் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கழிவுநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழைநீர் தேங்கிய பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் இதுவரை 45 இலட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் பொதுமக்கள் குடிநீரைப் காய்ச்சிப் பருகவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பொருட்டு தினசரி 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் ஆய்வகம் மூலம் பரிசோதிக்கப்பட்டுவரும் நிலையில் தற்போதைய வடகிழக்குப் பருவமழையின்போது நாளொன்றுக்கு 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது.

மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வாயிலாக லாரிகள் மூலம் குடிநீர் பெற பொதுமக்கள், கட்டணமில்லா தொலைபேசி எண்.1916 மற்றும் 044-4567 4567 (20 இணைப்புகள்) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். தெரு நடைகள், குடிநீர் வாரியத்தின் குடிநீர்த் தொட்டிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.