சென்னை:  வேளச்சேரி பகுதியில் குடியிருப்புக்காக தோண்டபட்ட 60அடி பள்ளத்தில் விழுந்து  இரு தொழிலாளர்கள் சிக்கிய  நிலையில்,  5 நாட்களுக்கு ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு  தொழிலாளர் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மிக்ஜாம் புயல் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் அடுக்குமாடி குடியிருப்புக்காக  தோண்டப்பட்ட பள்ளத்தில் இரண்டு தொழிலாளர்கள் சிக்கினர். புயல் வெள்ளம் காரணமாக, அந்த பள்ளத்தில் அடுத்தடுத்து மழைநீர் தேங்கியதால் அவர்களை மீட்க கட்டுமான நிறுவனம் முறையான நடவடிக்கை எடுக்காத நிலையில், பின்னர் L&T, NDRF, தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், பள்ளத்தில்  சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரான நரேஷ் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு தொழிலாளியின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் 2 பேர் பள்ளத்தில் விழுந்ததில் இருந்து சுமார் 100 மணி நேரத்திற்குப் பிறகு மீட்புப் பணியாளர்களால் இன்று (வெள்ளிக்கிழமை)  காலை 60 அடி அகழியில் இருந்து ஒருவரின் உடல் பாதுகாக்கப்பட்டது. சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த பேரிடரையும், கட்டுமான நிறுவனம் பற்றியும், எந்த மீடியாவுமே இந்த சம்பவத்தை பெரிய அளவில் கண்டுகொள்ளாத அதிசயம் சென்னையில் அரங்கேறி உள்ளது.
இயற்கை பேரிடரின் போதும் வலுக் கட்டாயமாக வரவழைத்து பணி செய்ய சொல்லி நிர்பந்தித்த  கட்டுமான நிறுவனம் எது என்பது கூட வெளியே தெரியாத அளவுக்கு அடையாளம் மறைக்கப்பட்டு உள்ளது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.