தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமானங்களை இயக்கத் தடை… ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

Must read

தென் ஆப்ரிக்காவில் புதிதாக B.1.1.529 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.

இவ்வகை வைரஸ் இஸ்ரேலிலும் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சில நாடுகளைத் தவிர தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை செய்துள்ளதுடன், இஸ்ரேலியர்களும் இந்த நாடுகளுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா, லெசோதோ, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், நமீபியா, இஸ்வாட்டினி, ஜாம்பியா ஆகிய தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தடை விதித்திருக்கின்றன.

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்லும் விமானங்களை பிரிட்டன் அரசு இன்று முதல் தடை செய்துள்ளது.

இங்கிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு வரும் விமானங்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மானியர்கள் மற்றும் தனது நாட்டு நிரந்தர குடிமக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜெர்மனி, அவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை அறிவுறுத்தியுள்ளது.

பட்டியலிடப்பட்ட தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடந்த 15 நாட்களில் சென்று வந்த யாருக்கும் அனுமதி இல்லை என்று இத்தாலி அறிவித்துள்ளது.

டென்மார்க் உள்ளிட்ட பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இங்கிருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், செக் குடியரசு தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 15 நாட்களில் குறைந்தபட்சம் 12 மணி நேரம் இருந்தவர்கள் கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளது.

சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு குடியுரிமை உள்ளவர்கள் தவிர இங்கிருந்து வரும் யாரையும் அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது.

ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கப்போவதாக ஜப்பான் அரசு கூறியுள்ள போதும், தடை விதிப்பதாக அறிவிக்கவில்லை.

இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வருபவர்களை கண்காணிக்க உள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

B.1.1.529 என்ற இந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் ஆற்றல் கொண்டதாக உள்ளதால் மருத்துவ விஞ்ஞானிகள் இதுகுறித்த தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

More articles

Latest article