சென்னை:
திமுக ஆட்சியில் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் ₹9.5 கோடிக்கு தரமற்ற பசுந்தேயிலைகளை கொள்முதல் செய்து உள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன், இதுதான் அதிமுக ஆட்சியின் கொள்கையாகவே இருந்தது. இதை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்பலப்படுத்தினார். தற்போது மத்திய கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை அதனை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியாளர்கள் ஜெயலலிதாவிற்கு அடிமையாக இருந்தவர்கள். பிறகு சசிகலாவுக்கு அடிமையானார்கள். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு தினகரனுக்கு அடிமையானார்கள். ஒன்றிய அரசை ஆளும் பாஜகவினர் நெருக்கடியை தொடர்ந்து மோடி-அமிஷா அடிமையானார்கள். காப்பாற்றுவதற்கு டெல்லியில் எஜமானர் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டார்கள்.

ஊழல் செய்வதற்காகவும் ஊழல் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவும் இணைந்த ஊழல் கறைப்படிந்த கரங்கள் தான் பாஜக-அதிமுக கூட்டணி கைகள். கடந்த 2016-2021-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு நிர்வாக சீர்கேடுகளும், முறைகேடுகளும் வியாபித்திருந்தன என்பதற்கு சிஏஜி அறிக்கை ஒரு முக்கிய ஆதாரம். முக்கியத்துறைகளுக்கு தனியாக அமைச்சர்களை நியமிப்பதுதான் வழக்கம். ஆனால் கடந்த ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களை தனது சம்பந்திக்கும், குடும்பத்தினருக்கும் ஒதுக்குவதற்காக அந்த இரண்டு துறைகளையும் தன்னிடமே வைத்துக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி என்ற சந்தேகங்களை உண்மையாக்கி இருக்கின்றன சிஏ.ஜி அறிக்கையில் உள்ள அதிர்ச்சி தகவல்கள்.

ஈபிஎஸ் கைவசம் இருந்த பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில், ஊழல் எப்படியெல்லாம் ஊக்கப்படுத்தப்பட்டது என்பதை புள்ளிவிவரங்களோடு சுட்டிக்காட்டியிருக்கிறது சிஏஜி அறிக்கை. முறைகேட்டின் உச்சமாக 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் 57 கணினிகளை பயன்படுத்தி 87 ஒப்பந்ததாரர்கள் டெண்டர் தாக்கல் செய்துள்ளனர். இந்த காலகட்டத்தில் 2091 டெண்டர்கள் ஒரே கணினியை பயன்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது. நெடுஞ்சாலை துறையில் 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டில் கோரப்பட்ட 907 ஒப்பந்த புள்ளியில் ஒவ்வொரு ஒப்பந்த புள்ளிக்கும் 2 முதல் 4 டெண்டர்கள் ஒரே ஐபி முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரே ஐபி முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 490 டெண்டர்கள் ஏற்கப்பட்டு பணிகள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சிஏஜி, இது ஒரு அப்பட்டமான விதிமீறல் என கண்டனம் தெரிவித்துள்ளது.

நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்த்து பொய்யான, போலியான ஒப்பந்ததாரர்களை ஏலத்தில் பங்கேற்றதுபோல் கணக்கு காண்பித்து ஈபிஎஸ் குடும்பத்தினர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களை பெறுவதில் ஆதிக்கம் செலுத்திய செய்யாத்துரை மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 4 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. கணக்கில் காட்டப்படாத 183 கோடி ரூபாய் பணம், 105 கிலோ தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. எனினும் 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப் பணித்துறையில் ஏராளமான ஒப்பந்தங்களை அவரது எஸ்.பி.கே. நிறுவனத்திற்கு எடப்பாடி பழனிசாமி அரசு வழங்கியுள்ளது. பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்திற்காக கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் விளம்பரங்கள் வெளியிட்டதில் கூட 2.18 கோடி ரூபாய் முறைகேடு என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2016 ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 5.09 லட்சம் வீடுகள் கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் கட்டிமுடிக்கப்பட்டதோ 2.8 லட்சம் வீடுகள்தான். இதிலும், தகுதியானவர்களுக்கு வீடு கொடுக்காமல் தகுதியற்ற பயனாளிகளுக்கு முறைகேடாக வீடுகளை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பயனடைய வேண்டிய பட்டியலின மற்றும் பழங்குடியின பயனாளிகளை உரியமுறையில் அடையாளம் காணவில்லை என அடுக்கடுக்கான புகார்களை கடந்த அதிமுக ஆட்சி மீது வைத்துள்ளது சிஏஜி அறிக்கை. தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்திடமிருந்து அதிமுக ஆட்சியில் உரியமுறையில் மின்சார வரி வசூலிக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டிலிருந்து பெறப்பட்ட மின்சார வரியில் 70 சதவீதம் அரசுக் கணக்கில் செலுத்தப்படாமல், தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்திடமே விடப்பட்டிருந்ததாக சிஏஜி அறிக்கை கூறுகிறது. இது மின்சார வரியை தவறாக பயன்படுத்த வழிவகுக்கும் அபாயகரமான நடவடிக்கை எனவும் அந்த அறிக்கையில் கண்டிக்கப்பட்டுள்ளது.

2017-18-ம் ஆண்டில் பொதுத் தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்க 60,000 லேப்டாப்கள் வாங்கப்பட்டு, 8079 லேப்டாப்கள் மட்டுமே மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதாவது 80% மாணவர்களுக்கு மட்டுமே பள்ளியில் படிக்கும் போது மடிக்கணினி வழங்கப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் வழங்கப்படாமல் இருந்ததால் லேப்டாப்களில் அதன் பேட்டரி மற்றும் இதர உதிரி பாகங்களின் உத்தரவாதம் காலாவதி ஆகி அரசுக்கு 68.71 கோடி தேவையற்ற இழப்பு ஏற்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டில் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற 2.32 லட்சம் மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடிப்பதற்கு முன்பாக இலவச லேப்டாப்களை பெறவில்லை.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக வாங்கப்பட்ட இலவச லேப்டாப்கள் அதிமுக ஆட்சியில் மற்ற மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. 55,000 மடிக்கணினிகள் பல ஆண்டுகளாக விநியோகிக்கப்படாமல் உள்ளன. பேட்டரியின் உத்தரவாதம் ஏற்கெனவே 2020-ம் ஆண்டு ஆகஸ்ட்டிலும், சிஸ்டத்தின் வாரண்டி 2022-ம் ஆண்டு ஆகஸ்ட்டிலும் காலாவதியாகிவிட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிப் பைகளை இலவசமாக வழங்கப்படுகிறது. 4.88 லட்சம் பள்ளிப் பைகள் தேவைக்கு அதிகமாக வாங்கியதால் அரசு நிதி 7.28 கோடி ரூபாய் முடக்கம் என கணக்கு அறிக்கைத்துறை குழு தெரிவித்துள்ளது” என்று கூறினார்.