டெல்லி:

கொரோனா ஊரடங்கு காரணமாக இஎம்ஐ கட்ட 3 அவகாசம் வழங்கிய மத்தியஅரசு, அதற்கான வட்டிகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் பல வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், இஎம்ஐக்கான வட்டிகளையும் சேர்த்து கட்டச்சொல்லி வாடிக்கையாளர்கள்  வலியுறுத்தி வருகிறது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  இது தொடர்பாக 3 நாட்களுக்குள் நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியும் முடிவு எடுக்க வேண்டும் என்றும்,  ஆறு மாத தவணைத் தொகைக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி செய்ய பரிசீலிக்கப்படுமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

கடன் தவணைக்கான சலுகை காலத்தில் வட்டியை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் கடந்த விசாரணையின்போது,  மத்தியஅரசு பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஅரசு பதில் மனுத்தாக்கல் செய்தது. அதில், இஎம்ஐ மீதான வட்டியை தள்ளுபடி செய்வது  சரியாக இருக்காது, இது வங்கிகள் மீதான நம்பகத்தன்மைக்கு ஆபத்தாகி விடும் என்று கூறியது.

விசாரணையைத் தொடர்ந்து,  வங்கிக் கடன் மாத தவணைத் தொகை வட்டி மீது வங்கிகள் வட்டி வசூலிக்கலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  ஆறு மாத சலுகை காலத்தில் கடன் தவணைகள் மீது வட்டி வசூலிக்கப்படுமா? அல்லது வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுமா? என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 3 நாட்களுக்குள் கூடி ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு  வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.