புதுடெல்லி:
2022 ஜனவரியில் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்தைக் கூறி உரையாற்ற ஆரம்பித்த பிரதமர் மோடி, ஜனவரி 2022 முதல் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். சுகாதாரப் பணியாளர்களுக்கான பூஸ்டர்கள் ஜனவரி 10, 2022 முதல் தொடங்கும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் பூஸ்டர் ஜனவரி 10, 2022 முதல் வழங்கப்படும் என்றார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், ஒமைக்ரானை கண்டு மக்கள் பதற்றம் அடையாமல் முகக் கவசம் அணிந்து, கைகளை முறையாகக் கழுவினாலே போதுமானது என்று மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நிறைய நாடுகளில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால், பாதிப்புகள் அதிகரிக்கின்றன என்றும் நாட்டில் 18 லட்சம் படுக்கை வசதிகள் தயாராக உள்ளன என்றும் தெரிவித்தார்.

1.40 லட்சம் ஐசியூ படுக்கை வசதிகள் தயாராக உள்ளன என்று தெரிவித்த மோடி, குழந்தைகளுக்கான ஐசியூ மற்றும் ஐசியூ உதவி இல்லாத 90 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக உள்ளன என்றும் கூறினார்.

மேலும், நாடு முழுவதும் 4 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் கூறிய அவர், கொரோனாவுக்கு எதிரான மூக்கு வழியாக செலுத்தப்படும் உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்றும் தெரிவித்த பிரதமர் மோடி, நாடு முழுவதும் இதுவரை 141 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 90% மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.