புதுடெல்லி: 
மூன்று விவசாய சட்டங்கள் குறித்து மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் மன்னிப்பை  தோமர் அவமதித்துவிட்டார் என்று கூறினார்.
விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,  ரத்து செய்யப்பட்டுள்ள மூன்று பண்ணை சட்டங்கள், 70 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு பெரிய சீர்திருத்தம் என்று சிலருக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால், அரசாங்கம் “ஒரு படி பின்வாங்கியது” என்றும் கூறி இருந்தார்.
தோமரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “நாட்டின் விவசாய அமைச்சர் மோடியின் மன்னிப்பை அவமதித்துள்ளார் – இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மீண்டும் விவசாயத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தால், மீண்டும் சத்தியாகிரகம் நடக்கும். ஈகோ முன்பு தோற்கடிக்கப்பட்டது. அப்போது தோற்கடிக்கப்படும்!”
நவம்பர் 23ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் தேவையான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று விவசாயச் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.
குருநானக்கின் பிறந்தநாளான நவம்பர் 19ஆம் தேதியன்று மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இதையடுத்து மூன்று சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் கடந்த ஓராண்டு காலமாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.