டில்லி

வாட்ஸ்அப் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதுமே சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.   ஆயினும் கொரோனா மூன்றாம் அலை பரவல் விரைவில் உண்டாகும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.   எனவே நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டதும் மத்திய அரசு சான்றிதழை வழங்கி வருகிறது.  அதில் பெயர், வயது. பாலினம், தடுப்பூசி மருந்தின் பெயர், தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும்.  இது ஆனலைனில் பதிவிறக்கம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

இந்த சான்றிதழை இனி வாட்ஸ்அப் மூலமாகப் பெறலாம் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாளவியா தெரிவித்துள்ளார்.  அதாவது 9013151515 என்ற எண்ணை அலைபேசியில் சேமித்து அதற்கு COVID CERTIFICATE என டைப் செய்து அனுப்ப வேண்டும்.

அவ்வாறு அனுப்பினால் உடனடியாக ஒ டி பி எண் அலைபேசிக்கு அனுப்பப்படும்.  அதைப் பதிவு செய்தால் தடுப்பூசி சான்றிதழ் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பப்படுகிறது.  இதை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாளவியா தெரிவித்துள்ளார்.