டெல்லி:

கொரோனா தொற்று அச்சுறுத்தல் குறித்த தகவல் பெற நிபுணர் குழுவும், அதற்காக பிரத்யேக இணையதளம் அமைக்கவும்,  மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால்,  வெளி மாநிலங்களில் பணிபுரிந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கூடியதால், பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதே சமூக விலக்கல்தான் எனவே,  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வது கொரோனா வைரஸை வரவேற்பதாகும். இவர்களை அந்தந்த மாநிலங்களுக்குள்ளே தடுத்து 14 நாட்கள் தனிமையில் வைக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர்கள் அலோக் ஸ்ரீவஸ்தவா, ராஷ்மி பான்சால் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் முன்னிலையில் காணொலி மூலம் நேற்று விசாரிக்கப்பட்டது.

விசாரணையிபோது கருத்து தெரிவித்த  தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில், ‘கொரோனா வைரஸைக் காட்டிலும் அதனால் தொழிலாளர்கள் இடம் பெயர்வதால் ஏற்படும் பதற்றமும், அச்சமும் பெரிதாக இருக்கிறது. இந்த விஷயத்தில நீதிமன்றம் குழப்பம் ஏற்படுத்தாது.

ஏனென்றால், தொழிலாளர்களைத் தடுக்க மத்திய அரசு ஏற்கெனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் மத்திய அரசு சார்பில் இதற்கு அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.

இன்று மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து,  கொரோனா தொற்று குறித்த தகவல் பெற நிபுணர் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், கொரோனா பற்றிய தகவல் பெற இணையதள பக்கம் ஒன்றையும் ஏற்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், சரியான அனைத்து தகவலையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும்  உச்சநீதிமன்றம் ஆணையிட்டு வழக்கை ஒத்திவைத்தது.