சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்,பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை நடத்த வேண்டும் என்றும்,  மாஸ்க் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை தலைமைஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக மாஸ்க் அணிவது அவசியம் என மாநில அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. பொது இடங்களில் மாஸ்க் அணியாவர்களிடம் இருந்து  அபராதம் வசூலிக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்தது.

தற்போதைய நிலையில் தினசரி பாதிப்பு 2ஆயிரத்தை கடந்தநிலையில், அதிகபட்சமாக  சென்னையில் 909, செங்கல்பட்டில் 352, திருவள்ளூரில் 100 மற்றும் காஞ்சிபுரத்தில் 71 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து,  பள்ளிகளிலும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அனைத்து வகை பள்ளிகளுக்கும், பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

  • பள்ளி வளாகத்தில் வெப்ப பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை நடத்திய பின்னரே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும்.
  • வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
  • மாணவர்கள் , ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
  • தனி மனித இடைவெளியை பின்பற்றுவதையும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்துகொள்வதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்
  • அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.