சென்னை: தமிழ்நாட்டில் உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே நாமக்கல், கடலூர், மாவட்டபள்ளிகளில் கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று கோவை, புதுக்கோட்டையில்  மேலும் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அந்த பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழகம் முழுவதும்  பல மாதங்களாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதால்,  பல்வேறு கொரோனா  கட்டுப்பாடுகளுடன்  9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் செப்டம்பர் 1ந்தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன.

அதையடுத்து, நாமக்கல், கடலூர் மற்றும் அரியலூரைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, அங்கு படிக்கும் அனைத்து மாணாக்கர்கள் உள்பட ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான்பேட்டை  அரசு மேல்நிலைப்பள்ளியில்  3 மாணவர்களுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களை பரிசோதனை செய்ததில் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முள்ளகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிடர் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிகள் 2 கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணாக்கர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவது பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.