சென்னை: தேவைப்பட்டால் கோவையை போல சென்னையிலும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும்,  இன்னும் ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்து உள்ளார்.

முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது,  கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் சென்னை முழுவதும் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் முகாம்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை தடுப்பூசி முகாமுக்கு வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். ன்னும் ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தொற்று பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது அவசியம். கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்தால் தொற்று பரவல் தடுக்கப்பட்டு விடும். தொற்று பரவல் மேலும் அதிகரித்தால், கோவையை போல சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.