புதுடெல்லி: கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை, 61.53% என்ற அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; இந்தியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை 7,42,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20,642 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 2.8% என்பதாக உள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 16,883 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில், தொற்றில் இருந்து மீட்கப்பட்ட ( குணமடைந்த) நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 4,56,830 என்பதாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், நோயாளிகளின் குணமடைதல் விகிதம் 61.53% ஐ எட்டியுள்ளது. தற்போது, நாட்டில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,64,944 ஆக உள்ளது.
அதிகமான கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருவதால், மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் சிகிச்சையில் உள்ள நோயாளிகள் ஆகியோருக்கான இடைவெளி 1,91,886 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மராட்டிய மாநிலத்தில், 2,17,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, தொற்றில் இருந்து 1,18,558 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தின் மொத்த பாதிப்பு 1,18,594 என்பதாகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,116 என்பதாகவும் உள்ளது. டெல்லியில் 74,217 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.