சென்னை: வரும் திங்கட்கிழமை தொடங்க உள்ள 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏக்கள் கொரோனா தொற்று சோதனை செய்ய வேண்டும் என்றும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ள எம்எல்ஏக்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் வருகிற 21ம் தேதி தமிழக  சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அங்கு சட்டப்பேரவை கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிம் பேசிய  சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 21ம் தேதி (திங்கள்) சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு கவர்னர் உரையுடன் ஆரம்பிக்கப்படுகிறது.

சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதற்கு முன் எல்லா உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெறும். அதன்படி, இன்று (18ம் தேதி) முதல் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பேரவை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

சட்டப்பேரவையில்  முதலில் கவர்னர் உரை  நடைபெறும். அதைத்தொடர்ந்து நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்ட பேரவை கூட்டங்களும் கலைவாணர் அரங்கத்திலேயே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர், கொறடா, அனைத்துக்கட்சி சட்டப்பேரவை தலைவர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான இருக்கை ஒதுக்கீட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ஆளுநர் உரையின்போது அனைவருக்கும் சீட் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்தான் அமருவார்கள். தேவையான நேரத்தில், தேவையான இடத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடத்துவது பற்றி ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும்.

ஓமந்தூரார் மருத்துவமனையை சட்டப்பேரவையாக மாற்றும் கேள்வி தற்போது வரை எழவில்லை. சட்டப்பேரவை கூட்டம் நடைபெற கலைவாணர் அரங்கமும், ஜார்ஜ் கோட்டையிலும் இடம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.