பீஜிங்

வ்வாலில் இருந்து மனிதர்களுக்கு விலங்குகள் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் என உலக சுகாதார மையம் சீனாவுடன் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த 2019ல் கொரோனா தொற்று சீனாவில் வுகான் நகரில் கண்டறியப்பட்டது..  சென்ற வருடம் ஜனவரி முதல் பிப்ரவரி வரை அதிக அளவில் சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அது உலகெங்கும் பரவத் தொடங்கியது.   இதையொட்டி கொரோனா எவ்வாறு  பரவியது என்பது குறித்த ஆய்வை சீனாவுடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் வுகான் நகரில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

இந்த ஆய்வின் இடைக்கால அறிக்கை வெளியாக உள்ளது.  இந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் முதலில் வவ்வாலிடம் தோன்றியதாகவும் அதன் பிறகு அந்த வைரஸ் மிருகங்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவியதாக அந்த அறிக்கையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.  விரைவில் இந்த அறிக்கை முழுவதுமாக வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே வேளையில் இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பு மாற்றப்படவும் வாய்ப்புள்ளதாகப்  பெயர் தெரிவிக்க விரும்பாத உலக சுகாதார நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   சீனாவின் மீது தவறுள்ளதாகக் கண்டறியப்பட்டால் இந்த மாறுதல் நடக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த வைரஸ் பரவலுக்கு எந்த மிருகம் பின்னணியில் உள்ளது என்பதும் முழு அறிக்கை வெளியான பிறகே தெரிய வரும்.,