புதுடெல்லி: இந்தியாவில் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 2 கொரோனா மரணங்கள் நிகழ்வதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், வினாடிக்கு 4 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 3,498 புதிய இறப்புகளில், 77.44% மரணங்கள், 10 மாநிலங்களைச் சேர்ந்தவை என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் 65.41 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில், கடந்த 10 நாட்களில் 31.46 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ள வழக்குகளில், 10 மாநிலங்கள் 73.05% சுமைகளைக் கொண்டுள்ளன.

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் ஆகியவைதான் அந்த 10 மாநிலங்கள்.

உலகளவில், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்களில், நான்கில் ஒன்று இந்தியாவில் நிகழ்கிறது என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7 நாட்களில், இந்தியாவின் சராசரி கொரோனா மரணம் நாளொன்றுக்கு 2,882 என்று பதிவாகியுள்ளது. இது உலகளவில் மிக அதிகம். அமெரிக்கா, இந்தியா, பிரேசில், மெக்சிகோ, பிரிட்டன் ஆகிய நாடுகள் கொரோனா மரணங்களில் முதல் 5 இடங்களில் உள்ள நாடுகள் ஆகும்.