சென்னை: மழை வெள்ளத்தில் தத்தளித்து வரும் பொதுமக்களின் அவசர உதவிக்கு சென்னை மாநகராட்சி பல்வேறு உதவி எண்களை அறிவித்து உள்ளது. தேவைப்படுவோர் இந்த எண்களுக்கு தொடர்புகொண்டு உதவி பெறலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்து உள்ளார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று  மதியம் முதல் இடைவிடாது மழை பொழிந்து வருகிறது. இந்த கனமழை மற்றும் அடைமழை  நாளை மதியம் வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகளை சென்னை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. பல இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கியும் வருகிறது. மேலும், மாநகராட்சி பணியாளர்கள், மின்சாரத்துறை, மீட்புக் குழுவினர், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களின் புகார்களை கேட்டு தொடர்ந்து நிவர்த்தி செய்யும் வகையில் உதவிமையம் உருவாக்கப்பட்டு அதன் எண் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை  மக்களின் அவசர தேவைக்கு 24மணி நேர உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதன்படி, 1913 என்ற ஹாட் லைனில் தொடர்பு கொள்ளலாம் என்றும், சமூக வலைதளங்களில் #Chennai1913 என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்துங்கள் என்றும் தெரிவித்து உள்ளது.

உங்களின் புகார்கள் மற்றும் உதவிகளை வாட்ஸ்ஆப் மூலமும் தெரிவிக்க இயலும். 9445477205, 9445025818, 9445025820, 9445025821 என்ற எண்களுக்கு வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகளை அனுப்பி உதவிகளை பெற இயலும் என அறிவிக்கப்பட்டுள்ளது.