திருச்செந்தூர்: தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் சூருசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு, கொரோனாவை காரணம் கூறி தமிழகஅரசு தடை செய்த நிலையில், திருச்செந்தூர் உள்பட பல்வேறு முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.  பக்தர்கள் நேரில் பங்கேற்காவிட்டாலும் சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் ஆன்லைன் மூலம் நேரலையில் சூரசம்ஹாரத்தை அரோகரா முழக்கமிட்டு வழிபாடு செய்தனர்.

முருகபெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று,  6ஆம் திருநாளை யொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார்.

கோவில் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர், கையில் வேலுடன் எழுந்தருளினார். முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்தார். இநத காட்சிகள் ஆன்லைன் மூலம் ஒளிரபப்பு செய்யப்பட்டன.

கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ள நிலையில், ஏசி தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்பட்டு படங்கள் ஓட்டி வரும் நிலையில், அங்கு பரவாத கொரோனா,  திறந்தவெளியில் நடைபெறும் சூரசம்ஹாரத்தினால் பரவுமா என கேள்வி எழுப்பி வரும் தமிழக மக்கள்,  தமிழகஅரசு தடை விதித்ததற்கு அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.