சென்னை: கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரித்து, தமிழ்நாடு அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கட்டட தொழில்களில் வடமாநிலத்தவர்களே பணியாற்ற வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது, வட மாநில தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் உணவு வழங்க சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது. தற்போது வடமாநிலத்தவர்கள் பிரச்சினை எழுந்துள்ளதால், தமிழ்நாடு அரசு, கட்டிட தொழிலாளர்கள்    விபத்தில் மரணமடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகையை உயத்தி உள்ளது. இதுவரை  ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, அதை  ரூ. 2 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளார் முகமது நசிமுத்தின் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாள ரின் கடிதங்களில், 25.05.2022 அன்று நடைபெற்ற 79வது வாரிய கூட்டத் தீர்மானம் இனம் 5-ன்படி, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும், தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2,00,000/- ஆக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடுமாறு கோரியுள்ளார்.

தமிழ்நாடு தொழிலாளர்நல வாரிய செயலாளரின் செயற்குறிப்பினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் நல நிதி செலுத்தும் தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1.00,000/-லிருந்து ரூ.2.00.000/- ஆக உயர்த்தி வழங்கவும். இதனால் ஏற்படும் செலவினத்தை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய நல் நிதியிலிருந்து மேற்கொள்ளவும், மேலும், இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகையினை 01.04.2023 முதல் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.