சென்னை: சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு  ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 76 பயிற்றுனர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 76 பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 8 பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 160 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.2.25 கோடி உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகள் மற்றும் 76 பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகள்  வழங்கினார்

இதுதொடர்பாக தமிழகஅரசு இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 160 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக 2 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் 76 பயிற்றுனர்களுக்கான பணி நியமன ஆணைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இதன் அடையாளமாக 8 வீரர், வீராங்கனைகளுக்கும், 8 பயிற்றுனர்களுக்கும் காசோலை, பணி நியமன ஆணை மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.