சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முதலமைச்சருடன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உடனிருந்தனர்.

 கடந்த மாதம் 24ம் தேதி தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95) உடல்நல பாதிப்பு காரணமாக பெரியகுளத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். இதனை தொடர்ந்து அவரது உடல் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் பிப்ரவரி 25ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், ஆதரவாளர்கள், ஊர் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இன்று திடீரென ஓபிஎஸ்-ன்  கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேசினார்.  அப்போது அவரது அம்மா பழனியம்மாள் நாச்சியார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் மற்றும் அவரது ஆதரவாளர் பன்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.