மும்பை: பாரத் ஜோடோ யாத்ராவில் இன்று தேசியகொடி ஏந்தி பங்கேற்ற சேவா தளத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ண குமார் பாண்டே திடீரென நிலைகுலைந்து மரணத்தை தழுவி உள்ளார். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல்காந்தியின் குமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையான பாரத் ஜோடோ யாத்திரை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைக் கடந்து மகாராஷ்டிராவிற்குள் நுழைந்துள்ளது. இன்று 62வது நாளாக ராகுல் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக நேற்று மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
இன்று பாரத் ஜோடோ யாத்ராவின் இந்த 62வது காலை, தனது நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தியுடன், சேவா தளத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ண குமார் பாண்டே, தேசியக் கொடியை ஏந்தி வீறு நடை போட்டு வந்தார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜயசிங் உள்பட பலர் கலந்துகொண்டனர். நடை பயணம் சென்றுகொண்டிருந்த கிருஷ்ண குமார் பாண்டே சில நிமிடங்களுக்குப் பிறகு, வழக்கம் போல், தேசிய கொடியை சக ஊழியரிடம் கொடுத்துவிட்டு பின் சென்றவர் திடீரென நிலைகுலைந்தார். இதனால், தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே கிருஷ்ண குமார் பாண்டே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. தீவிர காங்கிரஸ்காரரான இவர் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றது போது திடீர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.