2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி உயர்மதிப்பு நோட்டுத் தடை விதித்து பிரதமர் நரேந்திர மோடி திடீர் அறிவிப்பு வெளியிட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்த நடவடிக்கை 50 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தாவிட்டால் என்னை தண்டியுங்கள் என்று சவால் விடுத்தார்.

ஆனால், சாமானியர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கு பதிலாக அனைவரையும் விளக்கு ஏற்ற வைத்து கைகொட்டி சிரித்த பாஜக அரசின் இந்த உயர்பண மதிப்பிழப்பு நடவடிக்கை திட்டம் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

ஆயிரம் மற்றும் பழைய ஐநூறு ரூபாய் நோட்டுக்கு இன்று ஆறாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அப்போது மக்கள் அனுபவித்த துயரம் இன்று நினைத்தாலும் க்ளிசரின் போடாமலேயே ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது :

“பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டை கருப்புப் பணத்திலிருந்து விடுவிக்க முடியும் என்று உறுதியளித்தனர். ஆனால் அது தொழில் நிறுவனங்களை அழித்ததோடு பணி இழப்பை ஏற்படுத்தியது.

இதில் ‘மாஸ்டர்ஸ்ட்ரோக்’ என்று சொல்லப்படும் ஸ்பெஷல் ஐட்டம் என்னவென்றால் நாட்டில் ரொக்க பரிவர்த்தனை கருப்புப் பணத்துக்கு உதவுகிறது அதனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.

ஆனால், ஆர்.பி.ஐ. தரவு அடிப்படையில் 2016 ம் ஆண்டு இருந்ததை விட ரொக்க பரிவர்த்தனை 72 சதவீதம் அதிகரித்துள்ளது.

பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு காரணமான இந்த மாபெரும் தோல்வியை பிரதமர் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் 30.88 லட்சம் கோடி ரூபாய் ரொக்கமாக இருக்கிறது என்று கூறியுள்ளது. 2016 நவம்பர் 4 ம் தேதி இது ரூ. 17.7 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நாட்டில் புழக்கத்தில் விடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் குறித்த தரவும் நோட்டும் எங்குள்ளது என்று சல்லடை போட்டு தேடும் நிலையில் உள்ளது.

எத்தனை 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டது அதில் எத்தனை இன்னும் ரொக்கமாக பரிமாறப்பட்டு வருகிறது என்பது குறித்த தகவல் இல்லை.

இருந்தபோதும், ஆறு ஆண்டுகளில் 72 சதவீதம் அளவுக்கு ரொக்க பரிவர்த்தனை அதிகரித்திருப்பது கருப்பு பணம் அதிகரித்திருப்பதையே காட்டுவதாகவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு வரலாற்று பிழை என்று காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.