பெங்களூரு

ர்நாடகா,  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.     ஏற்கனவே குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.    அத்துடன் இமாசலப் பிரதேசத்திலும் காங்கிரசிடம் இருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.   இந்நிலையில் இனி நடைபெற உள்ள தேர்தல்களுக்காக காங்கிரஸ் பல திட்டங்கள் தீட்டி உள்ளது.

அதில் முக்கியமாக நாட்டில் 90% உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களை  காங்கிரஸ் குறி வைத்துள்ளது.   முதல் கட்டமாக வரும் பிப்ரவரி 12ஆம் தேதி பெங்களூரு நகரில் உள்ள நடைபாதைக் கடைக்காரர்கள் 24000 பேருக்கு அடையாள அட்டை வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.   காங்கிரஸின் இந்த அமைப்புசாரா தொழிலாளர் பிரிவுத் தலைவர் அரவிந்த் சிங், இந்த அடையாள அட்டை அவர்களுக்கு அடையாளம் மட்டுமின்றி உரிமையையும் உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.

அடுத்தபடியாக மார்ச் 8ஆம் தேதி அன்று நாட்டில் உள்ள வீட்டு வேலை செய்பவர்களுக்காக பல நிகழ்வுகளை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது   இது குறித்து சிங், “கடந்த 2004-05 எடுக்கப்பட்ட கணக்கின் படி வீட்டுவேலை செய்வோர் சுமார் 42 லட்சம் எனக் கணக்கிடப் பட்டிருந்தது.   தற்போது அது இருமடங்குக்கு மேலே சென்றிருக்கும்.  இவர்களுக்கு மருத்துவக் காப்பீடு,  குறைந்தபட்ச ஊதியம்,  வார விடுமுறை, சரியான வேலை நேரம் போன்றவைகளை நிர்ணயம் செய்ய தேவையான நடவடிக்கைகலை மேற்கொள்ள உள்ளோம்”  என தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஜனவரி 1 வரை காங்கிரஸ் 80000 உறுப்பினர்களை தங்கள் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவில் இணைத்துள்ளது.    இதில் நடைபாதை வணிகர்கள், வீட்டுப் பணி புரிவோர், துப்புறவுத் தொழிலாளர்கள்,  ரிக்‌ஷா ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் போன்ற பல பிரிவினரும் உள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர், “இந்த துறையை ஒழுங்கு படுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமை பாதுகாக்கப்படும் அதே நேரத்தில் வேலை தருவோரும் இவர்களுக்கு என்னென்ன வேலைகள் தரப்பட்டுள்ளது என்பதற்கேற்ப வேலை வாங்க முடியும்.   இதனால் பணி புரிவோர், மற்றும் பணி கொடுப்போர் இருவருக்குமே இது நன்மையைத் தேடித் தரும்” எனக் கூறி உள்ளார்.