டில்லி

செபி அதானி குழுமத்தின் மீதான புகாரை விசாரிக்கத் தயங்குவதாகக் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.

காங்கிரஸ் கட்சி, அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டு மற்றும் அதைத்தொடர்ந்து வெளியாகி வரும் பல்வேறு புகார்கள் தொடர்பாக மத்திய அரசு மீது கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. தொடர்ந்து இந்த புகார்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

தற்போது அதானியுடன் தொடர்புடைய போலி நிறுவனமான ‘ஓபல் இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக வெளியாகி இருக்கும் செய்தி ஒன்றைச் சுட்டிக்காட்டி மீண்டும் இந்த விவகாரத்தைக் காங்கிரஸ் எழுப்பி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

”கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் அதானி பவர் நிறுவனத்தில் ரூ.8,000 கோடி மதிப்புள்ள பங்குகளை கட்டுப்படுத்தும் நிறுவனம், துபாயில் ஒரு “தனி நபர் நிறுவனமாக” நிறுவப்பட்டது என்று புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் பல்வேறு தீவிரமான கேள்விகளை எழுந்துள்ளன. எவ்வாறு இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மின் உற்பத்தி நிறுவனமான அதானி பவர் நிறுவனத்தில் ரூ.8,000 கோடி மதிப்புள்ள 4.7 சதவீத பங்குகளைத் துபாயில் உள்ள ஒரு தனி நபர் நிறுவனம் கட்டுப்படுத்துகிறது?

இந்திய பத்திரச் சட்டங்களை ஓபல் நிறுவனம் அப்பட்டமாக மீறவில்லையா? அந்நிறுவனம் ஏன் அவ்வாறு செய்கிறது? இது உண்மையில் யாருடைய நிதி? கடந்த 2024 மே மாதத்துக்குப் பிறகு பிரதமர் மோடியின் திட்டங்கள் என்ன?

இத்தகைய புகார்கள் குறித்து விசாரிக்கப் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) தயங்குகிறது. எனவே அதானி மெகா ஊழலின் பின்னணியில் உள்ள முழு விவரங்களையும் விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பது மட்டுமே முன்னோக்கிச் செல்லும் ஒரே வழி ஆகும்”.

என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.