2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது அதற்காக தானியங்கி இயந்திரம் மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் புதிய முயற்சியில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது.

கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டிவரும் நிலையில் அதற்காக புதிய உத்திகளையும் கையாண்டுவருகிறது.

வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்ப்பது, மிஸ்ட் கால் மூலம் உறுப்பினர்களை சேர்ப்பது என்று தொடங்கி அடுத்தகட்டமாக தானியங்கி இயந்திரங்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களில் சுமார் 9100 தானியங்கி இயந்திரங்களில் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மொபைல் எண் விவரங்களைப் பதிவிட்டு க்யூ.ஆர். கோடுடன் கூடிய உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொள்ளும் வசதி கொண்ட தானியங்கி இயந்திர பூத்துகள் அமைக்கப்பட இருக்கிறது.

இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தானியங்கி இயந்திரம் மூலம் கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கையை முதல் முறையாக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.