புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பூசலை ராகுல் காந்தி இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


புதுடெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வீரப்ப மொய்லி கூறும்போது, ராகுல் காந்தியால் மட்டுமே கட்சியை வழி நடத்த முடியும்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களும், மாநில தலைவர்களும் தான் தேர்தல் தோல்விக்கு காரணம். ராகுல் காந்தி அல்ல.

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யக் கூடாது. அவர் பதவியில் தொடர வேண்டும்.

ராகுல் காந்தி கட்சித் தலைவராக பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் தான் ஆகிறது. எனவே தேர்தல் தோல்விக்கு அவர் பொறுப்பேற்க முடியாது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கும் நேரம் இதுவல்ல. மாநிலங்களுக்கு சரியான தலைவர்களை அவர் நியமிக்க வேண்டும்.
இதனை காலம் தாழ்த்தாமல் உடனே தொடங்க வேண்டும்.

அதேபோல், தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்களையும் சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

நாம் இளம் ரத்தத்தை தலைவராக பெற்றுள்ளோம். கட்சி அமைப்பை அவர் தனி ஆளாக நிச்சயம் சரி செய்வார்.

கட்சியினரை கருணை பார்க்காமல் ராகுல் காந்தி இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். ராகுலால் மட்டுமே கட்சியை ஒழுங்குபடுத்த முடியும்.

10 ஆண்டுகள் கழித்து பாஜகவினர் ஆட்சியை பிடித்தார்கள். இன்னும் ராகுல் காந்தியின் தலைமையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ராகுல் காந்திக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. 10 ஆண்டுகள் என்பது பெரிய விசயம் இல்லை.

சமீபத்தில் அரசியலுக்கு வந்த பிரியங்கா காந்தி, உத்திரப்பிரதேசத்தில் கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

2022-ம் ஆண்டு தேர்தலை அவர் குறி வைத்து செயல்படவேண்டும். உத்திரப் பிரதேசம் காங்கிரஸ் கைக்குள் வந்தால் மட்டுமே, காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்க முடியும்.

குறைந்த எண்ணிக்கையில் எம்பிக்கள் இருந்தாலும், மக்களவையில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்காற்றும் என்றார்.