மும்பை: கோவா சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்  சரத் பவார் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா, குஜராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கோவா மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய சட்டமன்றம் மார்ச் 18, 2017 அன்று முடிவடைகிறது. இதையடுத்து  கோவா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

அங்கு ஆட்சியை கைப்பற்றி எதிர்க்கட்சி தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக முட்டி மோதி வருகிறது. பாஜகவை ஒழித்துக்கட்ட, அங்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியாவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், கோவாவில் பாஜக ஆட்சியை மாற்ற வேண்டிய தேவை வந்துவிட்டது. மக்களுக்கும் புதிய ஆட்சி தேவைப்படுகிறது. அதனால், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், எத்தனை தொகுதிகள் இரு கட்சிகளுக்கும் வழங்கப்படும் என்பதை விளக்கிவிட்டேன். விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

உ.பி. சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, பாஜக அமைச்சரான,  சுவாமி பிரசாத் மவுரியா சமாஜ்வாதி கட்சியில் இணைந்துவிட்டார். மேலும் 13 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து சமாஜ்வாதி கட்சியில் இணையவுள்ளனர். உத்தரப்பிரதேசத்திலும் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வரப்போகிறது.  வகுப்புவாத பிரிவினைவாதம் உத்தரப்பிரதேசத்தில் தலைதூக்கி இருக்கிறது. இதற்கு அம்மாநில மக்கள் சரியான பதிலடி தரப்போகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.