புனே: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ராஜீவ் சதாவ் காலமானார். அவருக்கு வயது 46.

காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய இளைஞர் காங்கிரசின் முன்னாள் தேசியத் தலைவருமான ராஜீவ் சதாவ் கோவிட் பிந்தைய சிக்கல்களால்  தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 46. சதாவ் பெர்குசன் கல்லூரியின் பழைய மாணவர். மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்த சதவ்,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

ராஜீவ் சதாவ்வுக்கு கடந்த  ஏப்ரல் 22 அன்று கோவிட் உறுதி செய்யப்பட்டது, தொடர்ந்து  புனேவில் உள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த கட்ட சோதனையில் அவருக்கு பெருந்தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், நேற்று திடீரென  ராஜீவ் சதாவின் உடல்நிலை மோசமடைந்து திடீரென உயிரிழந்தார். அவர் COVID-19 இலிருந்து மீண்டாலும்,  அவர் ஸ்பான்டைலிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், அதற்காக சில நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தார், மேலும் அவரது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால், ஒரு பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால்,  அவருக்கு நுரையீரலில் ஃபைப்ரோஸிஸ் உருவானது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடிய நிலையிலும், அவர் மரணத்தை தழுவியதாக  மகாராஷ்டிரா  மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் கூறினார்.

ராஜீவ் சதாவின் மரணத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.