டில்லி

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் பாஜகவை நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஒன்றாம் தேதி அன்று இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  இந்த நிதிநிலை அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  இது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது.   இந்த விவாதத்தில் ஒரு பகுதியாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் நேற்று மாநிலங்களவையில் உரையாற்றினார்.

அப்போது கபில் சிபல், “முன்பு காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் செய்ததாக பா.ஜ.க, குற்றம்சாட்டியது.  அதையே இந்தாண்டு தேர்தலைச் சந்திக்க உள்ள மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பு திட்டங்களை வழங்கி பா.ஜ.,வும் செய்துள்ளது. நீங்கள் 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறீர்கள். எனவே இனியும் சாக்குப் போக்குகளை ஏற்க முடியாது.

பாஜக அரசு நாட்டின் வளங்களை நான்கைந்து பெரிய ஆட்களுக்கு வழங்குகிறது. இந்த நடவடிக்கை குரோனி கேப்பிடலிஸ்ட்களுடனான நட்புக்கு உதாரணம்.  ஆனால் நாடு வளம் பெற குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சிறுபான்மையினர் தன்னிறைவு அடைய வேண்டும்.  நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பொருளாதாரத்தில் தவறான நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போதைய  ஆண்டில் முதலீடுகளை விற்கும் இலக்கு 15% மட்டுமே பூர்த்தியாகியுள்ளது. பணி இழப்புகளைப் பற்றி அரசு எந்த கவனமும் செலுத்தவில்லை. தற்போதைய கொரோனா சூழலில் 12 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். அதே வேளையில் நூறு நாள் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு துறை ரூ.8.55 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது.  அரசு சார்பில்  தொலைத் தொடர்பு துறைக்கு எந்த நிவாரணமும் அளிக்கப்படவில்லை இல்லை. அத்துடன் பிரதமர்,விவசாயிகள் நல நிதி ரூ.10 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் வாக்கு வங்கி அரசியல் இல்லை எனக் கூறும் மோடி ஏன் தமிழகம், மேற்கு வங்கம், கேரளாவுக்குச் சிறப்புத் திட்டங்களை அளித்துள்ளார். நிதிநிலை அறிக்கையில் வாக்கு வங்கியும் நிதிநிலை அறிக்கைக்கு வெளியே நோட்டு வங்கி அரசியலும் உள்ளதா>” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.