ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்தநாளை கழுதையுடன் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணவர் சங்க தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர்மீது கழுதையை திருடியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகரராவின் பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. அவரை அவமானப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அமைப்பு தலைவரான நரசிங்கராவ் கழுதையின் உடலில் கேசிஆர் போஸ்டரை ஒட்டி, கழுதைக்கு பிறந்தநாள் கேக்கை வைத்து, அதை  வெட்டி கொண்டாடினார் இது சமூக வலைதளங்களிலும் வெளியானது.

இது முதல்வர் கேசிஆரை அவமானப்படுத்தும் செயல் என்று, ராஷ்டிரிய சமிதி கட்சியினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, மாணவர் அமைப்பு தலைவர் நரசிங்கராவை போலீசார் கைது செய்தனர். அவர்மீது கழுதையை திருடியதாக வழக்கு பதிவு செய்து,  ஜம்மிகுண்டா போலீசார் கரீம் நகரில் வைத்து  அவரை கைது செய்துள்ளனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்மூர்தான் இந்த வழக்கில் முதல் குற்றம் சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் தவிர மேலும் 6 பேரும் கழுதை திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான  மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறும்போது, மாநில முதல்வர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. தலைக்கு மேல் அதிகார போதை ஏறி விட்டால் எந்த அளவுக்கு பைத்தியம் முற்றும் என்பதை இவர்கள் காட்டி விட்டார்கள். மாணவர் தலைவர் போடப்பட்டிருப்பது பொய்யான, கேலிக்கூத்தான வழக்கு. தெலங்கானா மாநில ஹிட்லரின் செயலைக் கண்டிக்க வார்த்தையே கிடையாது என்று விமர்சித்தார்.

கைது செய்யப்படுடுள்ள  என்.எஸ்.யு.ஐ. மாணவர் அமைப்பின் தலைவராக இருப்பவர் பால்மூரி வெங்கட் நரசிங்கராவ் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஹூசூர்பாத் சட்டசபை இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.