பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்தால் மட்டுமே தீர்வு: அசோக் சவான் கருத்து

Must read

பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக்கொண்டால் மட்டுமே, மஹராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பான இழுபறிக்கு தீர்வு கிடைக்கும் என காங்கிரஸ் கட்சியின் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து சிவசேனாவும், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டன. இதில் பாஜக – சிவசேனா கூட்டணிக்கு மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்துள்ள நிலையில், இரண்டரை ஆண்டுகள் தங்களுக்கு ஆட்சி அதிகாரத்தையும், முதல்வர் பொறுப்பையும் வழங்க வேண்டும் என்று சிவசேனா கோரிக்கை வைப்பதால், ஆட்சி அமைப்பதில் பாஜகவுக்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. அதேநேரம், இந்த சூழலை பயன்படுத்தி 1999ம் ஆண்டு முதல்வர் பொறுப்பை காங்கிரஸுக்கு வழங்கி, துணை முதல்வர் பொறுப்பை தேசியவாத காங்கிரஸ் பெற்றது போல, தற்போது சிவசேனாவுக்கு முதல்வர் பொறுப்பை வழங்கி, துணை முதல்வர் பொறுப்பை சரத்பவார் பெற்று, காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியமைக்க உதவ உள்ளார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. ஆனால் அவற்றை சரத்பவாரும் மறுத்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அசோக் சவான், “மஹாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு, தனது கூட்டணி கட்சியை அரவணைத்து செல்ல பாஜக தயாராக இல்லாததே காரணம். அதனால் தான் சிவசேனா விரக்தியில் இருக்கிறது. இரு கட்சிகளிடமும் பதற்றத்தை தெளிவாக காண முடிகிறது. பாஜக கூட்டணியை சிவசேனா முறித்துக்கொண்டால் மட்டுமே, இதற்கு தீர்வு கிடைக்கும். அதுவரை குழப்பம் தொடரவே வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.

More articles

Latest article