பெங்களூரு: பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினரை கைது செய்யும் நடவடிக்கைகளில் கர்நாடக போலீசார் களம் இறங்கி உள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு பெங்களூருவில் வங்கதேச நாட்டினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கான பெயில் மனு நீதிபதி கே.என். பனேந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வங்க தேசத்தினரை கைது செய்வது தொடர்பான என்ன நடவடிக்கையை எடுத்துள்ளீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். நீதிமன்றத்தின் இந்த கேள்வியை தொடர்ந்து போலீசார் கைது நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
பெங்களூருவில் வங்கதேசத்தினரின் சட்டவிரோத குடியேற்றம் என்பது தற்போது முக்கிய பிரச்னையாக உருவெடுத்து இருக்கிறது. இதை மையமாக கொண்டு, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, தேசிய குடியுரிமை பட்டியல் கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், போலீஸ் ஆணையர் பாஸ்கர் ராவ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
முன்னதாக, கடந்த 25ம் தேதி, பெங்களூரு பகுதியில் 24 பெண்கள் உள்பட 60 வங்கதேசத்தினரை, சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக கூறி போலீசார் கைது செய்தனர். அதன்பிறகே வங்கதேசத்தினரை வளைத்து பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்ட தொடங்கி இருக்கின்றனர்.
இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறி இருப்பதாவது: இந்த விவகாரம் குறித்து பலமுறை சட்டசபைகளில் விவாதித்து இருக்கிறோம். காங்கிரசின் பரமேஸ்ரா உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றார்.
இதனிடையே, பொதுமக்களுக்கு போலீசார் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றனர். வங்கதேச நபர்களை வேலைக்கு அமர்த்துவது கூடாது என்று அறிவுறுத்தி உள்ளனர்.