திருவனந்தபுரம்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கேரளாவில் காங்கிரஸ் கட்சி இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக வெளிமாநில  வாகனங்கள் கேரள எல்லைகளில் தேங்கி உள்ளன.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது.

‘இதைக்கண்டிக்கும் விதமாக கேரளாவில் இன்று பந்து நடைபெறும் என்று கேரள காங்கிரஸ் அறிவித்திருந்தது.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள  ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல், டீசல் விலை  தினசரி உயர்வு போன்றவற்றால் மக்கள் துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். விலைவாசி விண்ணை தொடுகிறது. அதை குறைக்க மத்திய மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு அதல பாதாளத்துக்கு சென்று விட்டது என்று கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை   காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அரசுப் பேருந்து, தனியார் பேருந்துப் போக்கு வரத்து பெருமளவில் இயங்காது என்றும், கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பந்த் காரணமாக கேரளாவில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.  தனியார் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 

இதையடுத்து, கேரளாவுக்கு தமிழகத்தில் இருந்து   கன்னியாகுமரி வழியாகச் செல்லும் பேருந்துகள், களியக்கா விளையிலும், தேனி மாவட்டம் வழியாகச் செல்லும் பேருந்துகள் போடிமெட்டுப் பகுதியிலும், கோவை வழியாக செல்லும் பேருந்துகள் பாலக்காடு அருகேயும்  நிறுத்தப்பட்டுள்ளன.