டில்லி:

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கும் என அக்கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் அம்மாநில கட்சிகள் மத்திய அரசு மீது கடும் அதிருப்தியில்  இருக்கின்றன.  தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்துள்ளன. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதேபோல மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லோக்சபாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 9 எம்.பிக்கள் உள்ளனர். இதேபோல காங்கிரஸ், மஜ்லிஸ் கட்சிகளும் நம்பிக்க்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என அறிவித்துள்ளன.