சென்னை: மாநிலம் முழுவதும் இன்று நடைபெறும்  குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. தேர்வையே ரத்து செய்யக் கோரிக்கை  எழுந்துள்ளது. ஆனால் கூடுதல் நேரம் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி கூறி வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநில அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2022ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணி குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான மெயின் தேர்வுகள் எனப்படும் பிரதான தேர்வு இன்று (பிப்ரவரி 25-ம் தேதி) நடைபெற இருந்தது. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் பொதுத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்- 2, குரூப்- 2ஏ முதன்மைத் தேர்வில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, கடலூர், சேலம், தஞ்சை மாவட்டங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருப்பதால் தேர்வு உரிய நேரத்துக்குத் தொடங்கப்படவில்லை.

குரூப் 2, 2 ஏ தேர்வில் வினா, விடைத் தாள்கள் மாறி வந்திருப்பதாகத் தேர்வர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில், தேர்வையே ரத்து செய்து பிறிதொரு நாளில் நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தேர்வு குழப்பத்தால் ஏற்பட்ட தாமதத்தை ஈடுசெய்யக் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதையடுத்து,  . சென்னை, கடலூர் மற்றும் தஞ்சாவூர்  உள்ளிட்ட ஊர்களில்  தேர்வு தொடங்குவது தாமதமாகியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சுமார் ஐயாயிரம் பணியிடங்களுக்கு 50 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்னப்பித்துள்ளனர். 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு, 10 மணிக்கு பிறகும் சில இடங்களில் தேர்வு தொடங்கவில்லை. புதுக்கோட்டையில் 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய குரூப்-2 முதன்மை தேர்வில்,  ஜேஜே கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மாணவர்களுக்கான வினாத்தாள் மாறியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னையிலும் துரைப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களிலும், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு தொடங்கப்படவில்லை. இதனிடையே, எந்தெந்த மையங்களில் தாமதமாகத் தேர்வு தொடங்குகிறதோ, அந்த மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. உறுதி அளித்துள்ளதாக தகவல் அளித்துள்ளது.

ஆனால் பல இடங்களில் அதை ஏற்க தேர்வர்கள் மறுத்து வருகின்றனர். ”தமிழகம் முழுவதும் மிகப் பெரிய குழப்பம் நடந்திருப்பதால், அப்படியே தேர்வு நடத்துவது கடும் பாதிப்பை ஏற்படுத்தும். கூடுதல் நேரம் வழங்கினாலும் எதுவும் மாறப் போவதில்லை. தேர்வை சுமார் 55 ஆயிரம் பேர் எழுதுகிறோம். இதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு விடைத்தாள் மாறி மாறி வந்துள்ளது. ஒரு விடைத்தாள் குறைந்தது 100 பக்கங்களை உடையது.

55 ஆயிரம் பேர் தேர்வை எழுதும் சூழலில், பல லட்சக் கணக்கான பக்கங்களை மதியத்திற்குள் அச்சடித்துக் கொடுக்க முடியாது. அதனால் தேர்வினை ரத்து செய்ய வேண்டும். தேர்வை ரத்து செய்து வேறொரு நாளில் நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.