சென்னை: எம்எல்ஏக்களுக்கு வாரத்தில் 3 நாள், மாலை நேரத்தில் கம்ப்யூட்டர் பயிற்சியும், 2 நாள் புத்தாக்க பயிற்சியும் வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் கூறினார்.

தமிழக சட்டமன்றத்தில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் திமுக அரசால் கடந்த 13ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 14ந்தேதி வேளாண்மை பட்ஜெட்டும் காகிதமில்லாமலேயே தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து எம்எல்ஏக்களின் இருக்கைகளில் கணினி பொருத்தப்பட்டதுடன், அவர்களுக்கு கையடக்க கணினி (டேப்லெட் பிசி) யும் வழங்கப்பட்டது.

ஆனால், பல எம்எல்ஏக்களுக்கு கணினி இயக்குவதில் போதிய பயிற்சி இல்லாததால், அவர்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் கணினி பயிற்சி கொடுத்த சட்டப்பேரவை தலைவர் ஏற்பாடு செய்துள்ளார்.

இதுதொடர்பாக  இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய சபாநாயகர் அப்பாவு, சென்னை சேப்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் மாலை 4 மணிக்கு, எம்.எல்.ஏ-க்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், வரும் வாரம் முதல்,  திங்கள், செவ்வாய்கிழமைகளில் புத்தாக்க பயிற்சியும் , புதன் , வியாழன், வெள்ளி வரை கணினி பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.