சென்னை: ஆவின் முறைகேடு, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை என முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் சார்பில் வழக்குக்கு தடை கோரி உச்சநீதிமன்றம் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் ராஜேந்திர பாலாஜி மீது ஆவின் பணி நியமனம் மற்றும் வருமானத்துக்கு மீறி சொத்துக்குவித்ததாக புகார்கள் எழுந்த நிலையில், இதுதொடர்பான  வழக்கும்  பதியப்பட்டு உள்ளது.

இந்த வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளன. ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், இரண்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்பு வழங்கியதால், 3வது நீதிபதி விசாரணைக்கு சென்றுள்ளது. இதற்கு தடை கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்து, விசாரணையை தொடர உத்தரவிட்டது.

தற்போது திமுக அரசு, அவர்மீதான வழக்கு, விசாரணை என நாலாப்பக்கமும் முடுக்கி விட்டுள்ளது. அரசுத் தரப்பில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆவணங்கள் முழு முனைப்பில் திரட்டப்பட்டுவருகின்றன. இதனால்,  அவர் கடந்த சில நாட்களாக டெல்லி சென்று அங்கு பலரரை சந்தித்து வருகிறார். இதனால் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணையப்போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், அவர் தன்மீதான உயர்நீதி மன்ற விசாரணைக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில்  3வது நீதிபதியின் விசாரணைக்கு தடை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.